கோவில் மரங்களுக்கு பிறந்தநாள்; இணையவாசிகளை ஆச்சர்யப்படவைத்த அர்ச்சகர்!
தமிழகத்தின் தேனி மாவட்டம் - பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள நாகலிங்க மரங்களுக்கு 37 வது பிறந்த நாளை கோவில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் கொண்டாடிய நிகழ்வு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. அக் கோவில் வளாகத்தில் உள்ள பழமையான நாகலிங்க மரங்களுக்கு 37வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
கோவிலின் அர்ச்சகர் எம்.வி.ராமானுஜம கோயில் வளாகத்தில் 36 ஆண்டுகளுக்கு முன் நவமம்பர் 10ம் தேதி ஆண், பெண் நாகலிங்க மரக்கன்றுகளை நட்டதுடன் அதற்கு தினமும் ஊற்றி வளர்த்து வந்துள்ளார்.
நாகலிங்க மரங்கள் நன்றாக வளர்ந்து பூக்கள் பூத்த நிலையில் அதில் கிடைக்கும் பூக்களில் சுவாமிக்கு பூஜை செய்வார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரு மரங்களுக்கும் 37 வது பிறந்தநாளையொட்டி மரங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்து அர்ச்சகர் தீபாராதனை காட்டினார்.
அதோடு பக்தர்கள் அந் நாகலிங்க மரங்களுக்கு நீர் ஊற்றி வணங்கினர். இந்த நிகழ்வு இணையத்தில் பரவி இளையவாசிகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.