ரிஷி சுனக் மனைவியின் வாழ்க்கை வரலாறு
ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி 'இந்தியாவின் பில் கேட்ஸ்' என்றழைக்கப்படும் நாட்டின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான இந்திய கோடீஸ்வரர் நாராயண மூர்த்தியின் மகள் என தெரிய வந்துள்ளது.
பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளின் வாரிசான அக்ஷதா மூர்த்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் டாம் (non-domicile) அந்தஸ்தை பெற்றபோது பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
நான்-டாம் அந்தஸ்தை பயன்படுத்தி அவர் பிரிட்டனில் வரி செலுத்துவதைத் தவிர்த்ததாக விமர்சனங்கள் எழுந்த பின்னர் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கு பிரிட்டனில் வரி செலுத்த ஒப்புக்கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.
அவரது குடும்பத்தின் அபரிமிதமான செல்வம் இருந்தபோதிலும், அக்ஷதா மூர்த்தி மிகவும் எளிமையான ஆரம்பத்தைக் கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.
கடிதம்
அதனை தொடர்ந்து அவரது தந்தையான நாரயண மூர்த்தி தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில் அக்ஷதா மூர்த்தி பிறந்த செய்தியை ஒரு சக ஊழியரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டதை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு "உன் அம்மாவும் நானும் அப்போது இளமையாக இருந்தோம்.எங்கள் வாழ்க்கையில் எங்கள் பாதையைக் கண்டுபிடிக்கப் போராடினோம்," என்றும் அவர் எழுதியுள்ளார்.
அவர் பிறந்து சில மாதங்களில் தனது தந்தை வழித் தாத்தா பாட்டியோடு வசிக்க அனுப்பப்பட்டுள்ளார்.
ஏனெனில் அவரது தாயார் சுதா மூர்த்தியும் தந்தையும் மும்பையில் தங்கள் தொழிலை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தினர்.
அக்ஷதா மூர்த்தியின் பெற்றோர் தங்கள் இரு குழந்தைகளின் கல்வியிலும் கடின உழைப்பிலும் கவனம் செலுத்தினர்.
அக்ஷதா மூர்த்தி கலிஃபோர்னியாவில் உள்ள தனியார், தாராளவாத க்ளேர்மான்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதார மற்றும் பிரெஞ்சு படித்தார். பிறகு டெலாய்ட், யூனிலீவரில் பணியாற்றுவதற்கு முன்பு ஃபேஷன் கல்லூரியில் டிப்ளமோ பெற்றார். பிறகு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தான், பல்கலைக்கழகத்தில் சூனக்கை சந்தித்தார். அவர்கள் 2009இல் திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
42 வயதான அவர் கலிஃபோர்னியாவில் தனது சொந்த ஃபேஷன் லேபிலான அக்ஷதா டிசைன்ஸை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக நிதித்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
விரிவாக, சூனக்-மூர்த்தி தம்பதியின் பெரும் செல்வம் எளிய மக்களிடையே சில கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக அடிப்படை செலவுகள் நெருக்கடியின்போது அவர் சாதாரண மக்களுடன் தொடர்பில் இல்லையா என்ற கேள்வியை சிலர் எழுப்பினர்.
கடந்த காலங்களில், தெரசா மேயின் கணவர் ஃபிலிப் மே உட்பட சில பிரதமர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் பொது வெளியில் பெரிதாகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர்.
மனித உரிமை வழக்கறிஞர் செரி ப்ளேர், அவரது கணவர் டோனி ப்ளேர் பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்த பிறகும் அவரது வேலையைத் தொடர்ந்தார். அது பலரின் கவனத்தை ஈர்த்தது. செரி ப்ளேர், தனது தன்னார்வ பணிகள், புத்தக ஒப்பந்தங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வந்தார்.
இதுவரை அக்ஷதா மூர்த்தி ஊகடங்களின் கவனத்தை நாடியதாகத் தெரியவில்லை. மாறாக சமீபத்திய சர்ச்சைகளால் ஊடகங்களின் பார்வை வளையத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்.
இப்போது அவரது கணவர் பிரிட்டிஷ் அரசியலின் உயர் பதவிக்கு வந்துள்ளதால், அக்ஷதா மூர்த்தியின் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாகும்.