இலங்கைக்கு புதிய சுகாதார வழிகாட்டலினால் பெரும் ஆபத்து!
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் அந்நாடுகளில் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்க தேவையில்லை என்று வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலின் மூலம் புதிய பிறழ்வுகள் மிக இலகுவாக நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே இந்த தீர்மானம் துரிதமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சுகாதார தொழில் வல்லுனர்கள் கல்வியகத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ, (Ravi Kumudesha) தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவ்வாறு நடமாடும் இரசாயன ஆய்வு கூடங்களை எமக்கு வழங்கினால் சகல மாவட்டங்களுக்கும் சென்று பாடசாலைகள் , தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் எழுமாற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த அலை உருவாகக் கூடிய அபாயம் எங்கிருக்கிறது என்று இலகுவாகக் கண்டறிய முடியும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் மீண்டுமொரு கொரோனா பரவல் அலை ஏற்படாமல் தடுப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா? கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை யார் கைவிட்டாலும் சுகாதார அமைச்சு அதனைக் கைவிடுவது பொறுத்தமற்றது. ஆனால் நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடருமாயின் மீண்டுமொரு பாரதூரமான நிலைமை ஏற்படுவதையும் , அதனால் பலர் உயிரிழப்பதையும் தடுக்க முடியாது.
எனவே ஆய்வு கூடங்களில் விஞ்ஞான ரீதியான கண்காணிப்புக்கள் மற்றும் எதிர்வுகூறல்களை முன்னெடுப்பதோடு , எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் விஸ்தரிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷக்கு (Gotabaya Rajapaksa) இதுவரையில் 8 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் , இதுவரையில் எந்தவொரு பதிலும் கிடைக்கப் பெறவில்லை.
இவை மாத்திரமின்றி நடமாடும் ஆய்வு கூடங்களை அமைத்து தருமாறும் கோரியிருந்தோம். சர்வதேசத்திடமும் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அதற்கமைய 5 நடமாடும் ஆய்வு கூடங்களை வழங்குவதற்கு நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்றை இலவசமாக வழங்குவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே குறித்த 5 நடமாடும் ஆய்வு கூடங்களையாவது பெற்றுத்தருமாறு மீண்டும் கோருகின்றோம்.
இவை கிடைக்கப் பெற்றால் பாடசாலைகள் , தொழிற்சாலைகள் என பல இடங்களில் எழுமாற்று சோதனைகளை முன்னெடுத்து அடுத்த அலை உருவாகக் கூடிய அபாயம் எங்கு காணப்படுகிறது என்பதை இனங்கண்டு , தனிமைப்படுத்த வேண்டிய இடங்களை முடக்க முடியும். அவ்வாறில்லை எனில் மீண்டும் நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.
தற்போது விமான நிலையத்தில் 2 மணித்தியாலங்களுக்குள் முடிவினைப் பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் இரசாயன ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அமைக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் அந்நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என்று புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.