பிக்குகள் சென்ற வாகனம் கோர விபத்து: இருவர் கவலைக்கிடம்!
கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நான்கு பிக்குகள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் இன்று (17) புதன்கிழமை மாலை திருகோணமலை, கந்தளாய் - கண்டி வீதியின் 87ஆம் மைல் கல்லில் இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்து குறித்து தெரியவருவதாவது,

ஹபரணையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், சேருவில விகாரையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இவ்விபத்து சேருவில விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு பிக்குகள் திரும்பிக் கொண்டிருந்த போதே ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தின் போது 10 பிக்குகள் உட்பட 19 பேர் வானில் இருந்ததாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த பிக்குகளில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
