நாமல் ராஜபக்ச மற்றும் மாலைதீவு தூதுவர் இடையில் சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத் (Masood Imad)கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று காலை பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் புதிய வழிகளை ஆராய்வது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, இளைஞர் வலுவூட்டல் மற்றும் விளையாட்டுத் துறை அபிவிருத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாமல் ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் இரு நாடுகளினதும் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியமானது என இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
மாலைதீவு தூதுவர் மசூத் இமாத், இலங்கையுடனான மாலைதீவின் உறவை உயர்வாக மதிப்பதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் மாலைதீவுக்கு இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு அவர் தனது நன்றியினைத் தெரிவித்தார்.