தொடர் விவாகரத்தால் திருமணம் நடப்பதை நிறுத்திய பிரபல ஆலயம்; பக்தர்கள் க்ஷாக்!
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அலசூரில் வரலாற்று சிறப்புமிக்க சோமேஸ்வரா கோவிலில் திருமணங்கள் இனி நடபெறாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமேஸ்வரா கோவிலில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

அதிகரிக்கும் விவாகரத்து
இந்நிலையில் திடீரென்று இந்த கோவில் நிர்வாகம் இனி எங்கள் கோவிலில் திருமணம் நடத்திவைக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,
எங்கள் கோவிலில் முகூர்த்த நாட்களில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக இங்கு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் விவாகரத்து அதிகரித்துள்ளது.

அவர்கள் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கு விசாரணைக்கு கோவிலில் பதிவு செய்த ஆவணங்களை கேட்டு அடிக்கடி பலரும் வருகிறார்கள். இதனால் எங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
அத்துடன் விவாகரத்து வழக்குகளில் திருமணம் செய்து வைத்த பூசாரிகளையும் சிலர் கோர்ட்டு படிக்கட்டுகளை ஏற வைக்கிறார்கள். எங்களால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தான் நாங்கள் இனி எங்கள் கோவிலில் திருமணம் நடத்தமாட்டோம் என்ற முடிவை எடுத்துள்ளோம் என்றனர்.
சமீபத்தில் ஒருவர், சோமேஸ்வரா கோவிலில் திருமணம் நடத்த அனுமதிப்பதில்லை என கர்நாடக முதல்-மந்திரி அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதன்பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது . இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது