ஆரம்பமானது போராட்டம்; களத்தில் இறங்கிய சஜித்!
மக்கள்மீது சுமைகளை திணிக்காமல் நிவாரணங்களை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசு பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்களும், கட்சி ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும், ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் எதிர்ப்பு கூட்டம் தற்போது கொழும்பில் நடைபெற்று வருகின்றது.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் கொழும்பு நோக்கி வந்து இந்த போராட்டத்தில் கல்லந்துகொண்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் , நிவாரணம் வேண்டும், வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும், நாட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பியவண்ணம் தற்போது பேரணியாக பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் ஆரம்பமான குறித்த பேரணி , ஹெட் பார்க் மைதானம்வரை சென்று, அங்கு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தால் கொழும்பிலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.