ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவிற்குள் ; இலங்கையில் தொடரும் மழை
இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஊடறுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து வருகின்ற நிலையில், இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலைமேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது இந்தியக் கரையோரப் பகுதிகளை கடந்து வருகின்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லையெனினும், அதனை நோக்கி வீசும் காற்றோட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போதைய மழை நிலைமை மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன், வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.