தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள் ; ஐவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 05 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் அந்த பகுதி மக்கள் பகலில் வீடுகளை பூட்டி வைத்து கொண்டு பய பீதியில் வாழ்ந்து வருவதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஊடுருவிய குரங்குகள் பலன் தரும் மா, பலா, கொய்யா, மாதுளை போன்ற மரங்களில் உள்ள பழங்களை சாப்பிட்டு வருவதுடன், வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் சீற்களை உடைத்து அட்டகாசம் புரிந்து வருவதுடன் கடந்த வெள்ளிக்கிழமை வரை கடந்த ஒரு வாரத்தில் அந்த பகுதியில் உள்ள 05 பேர் குரங்கு கடிக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை
அதேவேளை, தொடர்ந்தும் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றதால் பய பீதியில் பகலில் கூட வீடுகளை பூட்டி வைத்துக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்த போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பாக வனவிலங்கு பரிபாலன சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக குரங்கில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.