போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்
மட்டக்களப்பில் விபத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (26) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான ஜீப் வண்டியில் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ஜீப் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்து
இதன்போது மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில், ஜீப் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது .
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரின் ஒரு கால் முறிந்ததுடன், அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தைத் தொடர்ந்து பொலிஸ் வாகன சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் கடந்த 25ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதவான் விடுவித்தார்.
எனினும், மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் குறித்த பொலிஸ் சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த சாரதியை உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.