கிராமத்திற்குள் புகுந்து உலாவிய இரட்சத முதலை! மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
மட்டக்களப்பு - கதிர்காமர் வீதி கிராமத்திற்குள் புகுந்த முதலை ஒன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மட்டக்களப்பு – கதிர்காமர் வீதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரியவருவதாவது, கதிர்காமர் வீதியில் அதிகாலை உலாவி கொண்டிருந்த முதலையைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து குறித்த இடத்திற்கு வந்த கல்லடி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், முதலையைப் பாதுகாப்பாக மீட்டு செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகிலுள்ள குளம் ஒன்றில் விடுவித்துள்ளனர்.
இதேவேளை, சுமார் 07 அடி நீளத்தினைக்கொண்ட குறித்த முதலை கிராமத்திற்கு அருகாமையிலுள்ள தோனா பகுதியிலிருந்து வந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன், அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் அதனைப் பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.