பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக பதவியேற்கவுள்ள முக்கிய நபர்!
பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) பதவி விலகுவதை தொடர்ந்து ஏற்படும் தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு, இலங்கையின் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி வருகிறது.
அவர், நாடாளுமன்ற உறுப்புரிமையை பெறுவதற்கு வசதியாக, நேற்று முன்தினம் (07-06-2022) மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நாடாளுமன்ற உறுப்பினரானவுடனேயே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும், முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சராக அவர் பதவியேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் தம்மிக்க பெரேரா, Vallibel Finance இன் உரிமையாளர்.
சம்பத் வங்கி மற்றும் பான் ஏசியா வங்கி போன்ற பல நிதி நிறுவனங்களில் அவர் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார். சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் ஜாக்பொட் மற்றும் சூதாட்டத்துடன் தனது தொழிலை ஆரம்பித்தாலும், பின்னர் அவர் மூலோபாயமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ததால் பல தொழில்களில் ஈடுபட்டார்.
கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் களமிறங்கலாமென ஆரம்பத்தில் தகவல் பரவிய போதும், பின்னர் கோட்டாபய ராஜக்ஷ (Gotabaya Rajapaksa) ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தன்னால் ஏதாவது செய்ய முடியுமானால் நாட்டிற்காக எதையும் செய்யத் தயார் என அண்மையில் அறிவித்திருந்தார்.
இலங்கை தொடர்ந்து கடன் வாங்குகிறது ஆனால் பணம் சம்பாதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. எவ்வளவு காலம் அதைச் செய்வது? “நாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இத்தகைய பின்னணியில்தான் அவரது நேரடி அரசியல் வருகை ஆரம்பிக்கிறது.