சமூக ஊடகங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட இலங்கை பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இணைய மோசடி
"இணையம் வழியாக நடைபெறும் மோசடிச் செயல்கள், குறிப்பாக டெலிகிராம் (Telegram), வட்ஸ்அப் (WhatsApp) போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தினசரி பதிவாகின்றன.
இதில், மோசடிக்காரர்கள் தனிநபர்களை ஏமாற்றி, அவர்களது பயனர்பெயர், கடவுச்சொற்கள் (User Name/Password), QR குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர். மேலும், இணையவழியான வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, பல்வேறு கணக்குகளுக்குப் பணத்தை வைப்பிலிடச் செய்து மோசடிகள் நடைபெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற மோசடிகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.
அறியப்படாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் வெளியிடும் இணைய இணைப்புகள் (Links) மற்றும் ஸ்கேன் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல். இணைய வெளியிலுள்ள அறியப்படாத நபர்களின் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றுவது, அவர்களுடன் வங்கித் தகவல்களைப் பகிர்வது, உங்கள் வங்கிக் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பது ஆகியவற்றைத் தவிர்த்தல்.
கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள், OTP குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களை வெளி நபர்களுடன் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
அறியப்படாத நபர்கள் வழங்கும் கைபேசி எப்ளிகேஷன்களை (Mobile Applications) நிறுவும்போதும் மற்றும் இணைய இணைப்புகளைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கவனமாக இருப்பதுடன், இலத்திரனியல் சாதனத்தின் இருப்பிட அனுமதியைக் (Location Permission) கொடுப்பதை தவிர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.