நாட்டுக்கு வருகின்றார் பசில் ராஜபக்க்ஷ; பரபரப்பில் தென்னிலங்கை அரசியல்
அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாளை மறுதினம் (20) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மைய அரசியல் நெருக்கடியின்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமானார்.
நாளைமறுதினம் நாட்டுக்கு
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, நாளைமறுதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு திரும்பும் பசில் ராஜபக்ஷ, தற்போது நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் 2023 நிதியாண்டுக்கான பாதீட்டுக்கு, இரண்டில் மூன்று பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பார் என்றும் கட்சியின் பிரபலத்தை மீண்டும் பெறுவதற்காக அடிமட்டத்திலிருந்து பிரசாரத்தை தொடங்குவார் எனவும், தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.