இலங்கையில் மீண்டும் அறிமுகமாகும் பண்டமாற்றுச் சேவை! தேயிலை கொடுத்து எண்ணெய் வாங்க முடிவு
இலங்கையில் மீண்டும் பண்டமாற்று முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன்படி இலங்கை , ஈரானுடன் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய்க்காக தேயிலையை வழங்கும் பண்டமாற்றுச் சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தாமதம்
2012இல் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக 2021இல் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றினால் இந்த நடைமுறை தாமதமானது.
இந்நிலையில், தற்போது ஈரான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் டொலர்களை நம்பாமல் வர்த்தகம் செய்யலாம் என்று இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை 48 மாதங்களுக்கு ஈரானுக்கு இலங்கை அனுப்ப உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவு அந்நிய செலாவணியை தரும் தேயிலை
எனினும், மாதத்திற்கு சுமார் 2 மில்லியன் டொலர்களில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக நிராஜ் டி மெல் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் பிரபலமான சிலோன் தேயிலை இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பயிராகும்.
இது கடந்த ஆண்டு 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித்தந்ததாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான், இலங்கையின் முக்கிய தேயிலை கொள்வனவாளர்களில் உள்ளடங்குகிறது.
எனினும், ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் வர்த்தகத்தை பாதித்ததால் 2018 இல் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கடந்த ஆண்டு 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இந்த ஏற்றுமதி சீராக குறைந்தது.
இதற்கிடையில், அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பண்டமாற்றுத் திட்டத்தின் கீழ், எண்ணெயை கொள்வனவு செய்யும் அரச நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தேயிலை சபையின் ஊடாக ரூபாவை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.