பம்பலப்பிட்டி பள்ளிவாசல் தாக்குதல்; சந்தேகநபர் கைது
பம்பலப்பிட்டி ‘ போரா’ முஸ்லிம் பள்ளிவாசல் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்க மறுத்து வருவதாக தெரிவித்த பம்பலப்பிட்டி பொலிஸார் , சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த உஸ்மான் அப்பாஸ் கென்போய் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியக வாழ்ந்துவரும் அவர், நேற்று முன்தினம் (9) பம்பலபிட்டி போரா பள்ளிவாசளின் ஒரு பகுதி மீது பெற்றோல் குண்டை வீசி தாக்கியுள்ளார்.
எனினும் அது வெடிக்காத நிலையில், மீளவும் வீட்டுக்குச் சென்று மற்றொரு பெற்றோல் குண்டை எடுத்து சென்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
பம்பபலபிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் சமயலறையில், 36.5 கிலோ நிறையுடைய 6 சமயல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்துள்ள நிலையில் அவற்றை இலக்கு வைத்தே கைதான சந்தேக நபர் பெற்றோல் குண்டை எறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர் எறிந்த இரு குண்டுகளும் வெடிக்காத நிலையில், சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் உடனடியாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சந்தேக நபரைக் கைது செய்ததாகவும், எனினும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலமளிக்க மறுக்கும் நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் நீதிமன்றில் கூறினர்.
சந்தேகநபர் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், சந்தேக நபரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.