பலப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டின் பின்னணி வெளியானது ; பிரதான சந்தேக நபர் அடையாளம்
பலப்பிட்டியவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று (17) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் அஹூங்கல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு வழங்கியுள்ளார். பின்னர், அஹூங்கல்ல பொலிஸார் காயமடைந்த நபரை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அஹுங்கல்லவில் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பபா' என்பவரின் உதவியாளரான லக்ஷன் மதுஷங்க என்பவர் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மேலும் அவருக்கு 'பபா'விடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று இரவு 'பபா' என்ற நபர் அவரை அழைத்து, போதைப்பொருள் பொதியை வழங்க பலபிட்டியவிற்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர், லக்ஷான் மதுஷங்க என்ற நபர் வாடகை முச்சக்கர வண்டியில் பலபிட்டியவுக்குச் சென்றுள்ளார்.
ரேவத வித்யால மாவத்தைக்கு வருமாறு அவருக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்திருந்தன, மேலும் அவர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பாடசாலைக்கு அருகில் நடந்து செல்லும் போது இரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான லக்ஷான் மதுஷங்க ஓடிச் சென்று தான் வந்த முச்சக்கர வண்டியில் ஏறி அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று 'பபா'வின் உதவியாளர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அஹூங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.