இலஞ்சம் பெற்ற குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் பிணை நிராகரிப்பு
ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் அனியா பிள்ளை முபாரக்கின் பிணைக் கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.
இதன்படி, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதலகம உத்தரவிட்டுள்ளார்.

எனினும், சந்தேகநபரான தவிசாளரின் சாரதியான முஹம்மது முஸ்தபா என்பவரைத் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வரவிருந்த ஒருவரின் காணிக்கு உறுதிப்பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.