உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம் : அறிக்கை கோரும் அமைச்சர்
யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகளில் ஏற்பட்ட பக்டீரியா தாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையை உடனடியாக கையளிக்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் தொடர்பில் இன்று ஆராய்ந்தது.
விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இதன்போது, உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்ற 21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் இவ்வாறு பக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதை உருளைக்கிழங்குகள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அதில் பக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளமை கடந்த 17ஆம் திகதி கண்டறியப்பட்டது.