மழைக்காலங்களில் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்!
மழைக்காலத்தில் பெரும்பாலும் மக்கள் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவு பொருட்களையும், சூடான டீ, காபியையும்தான் பலரும் விரும்புவார்கள். மழைக்காலத்தில்தான் மலேரியா, டெங்கு, டைபாய்டு, உணவு விஷமாக மாறுவது, வயிற்றுப்போக்கு, வைட்டமின் டி குறைபாடு மற்றும் சரும நோய்த்தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரிக்கும். சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும்.
இதேவேளை கால நிலைக்கு ஏற்ப உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அப்படி செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த பருவத்தில்தான் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருக வேண்டும். குடிநீரை கொதிக்கவைத்து பருகுவது அதைவிட சிறந்தது.
மேலும், திவர உணவுகளை உட்கொள்வதால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஏற்படும் வியர்வை பிரச்சினை மற்றும் ஈரப்பதம் சார்ந்த பிரச்சினைகளை பாதுகாப்பானது. சூடான சூப்கள், இஞ்சி டீ, மூலிகை டீ, மசாலா சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
இதேவேளை மழைக்காலத்தில் ஒரு சில உணவு வகைகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை. பருவமழை காலத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை இரைப்பை, குடல் அமைப்பை பாதிக்கக்கூடும். எனவே இந்த பருவத்தில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைவாக சாப்பிடலாம்.
எண்ணெய் பலகாரங்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்கு உபயோகிக்க கூடாது. மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.
மேலும், பருவமழை காலங்களில் மாறுபடும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை காரணமாக பச்சை இலை காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்ச்சி அடையக்கூடும். எனவே காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுவது நல்லது. அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிடுவதும் அவசியமானது.