கோடை காலத்திற்கு ஏற்ற அவகோடா பழத்தில் இத்தனை நன்மைகளா?
கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கவும் நம் உடலை குளர்ச்சிப்படுத்தவும் உடலுக்கு நீர்சத்தை கொடுக்கவும் இயற்கையான முறையில் பல வழிகளை நாம் தேடி கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் நல்ல சுவையும் க்ரீமியான தன்மையிலும் இருக்கும் அவகோடா பழத்தில் வெப்பத்தை தணிக்க உடலுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? அவ்வாறு இந்த அவகோடா பழத்தில் என்னென்ன நன்மை இருக்கின்றது என நாம் இங்கு பார்ப்போம்.
நீர்ச்சத்து
அவகோடா பழத்தில் 73 சதவிகிதம் தண்ணீர் தான் நிரம்பியுள்ளது. கோடை காலத்தில் இயல்பாகவே உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் கட்டாயம் அவகோடா பழத்தை சாப்பிட வேண்டும். நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் திரவ பானங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது அவகோடா.
எலக்ட்ரோலைட் சமநிலை
அவகோடா பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் உடலின் எகட்ரோலைட் சமநிலையை பராமரிக்க இது பெரிதும் உதவுகிறது. அதிகமான வெப்பநிலையில் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க பொட்டாசியம் அவசியமாகும். பொதுவாக வாழைப்பழத்தில் தான் அதிக பொட்டாசியம் இருக்கும் எனக் கூறப்படுவதுண்டு.
ஆரோக்கிய கொழுப்புகள்
அவகோடா பழத்தில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நமக்கு வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இந்த நிறைவுறா கொழுப்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இந்த கொழுப்புகள் கரையக்கூடிய கொழுப்பு வைட்டமினை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. இதன் மூலம் கோடை காலத்தில் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
ஆற்றல் அதிகரிப்பு
அவகோடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, கார்போஹைடரேட்ஸ் ஆகியவை சமநிலையில் உள்ளதால் நம் உடலுக்கு நீடித்த ஆற்றலைத் தருகிறது. இதன் காரணமாக கொதிக்கும் வெயிலில் கூட நம்மால் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க முடிகிறது.
சரும பாதுகாப்பு
அவகோடா பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் தீங்கு நிறைந்த புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் நமக்கு ஆரோக்கியமான சருமத்தை தருவதோடு வீக்கத்தை குறைத்து கோடை வெயிலுக்கு எதிராக பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது.