குற்றப்பத்திரிகை வேண்டாம்; மகிந்த ராஜபக்ஷ மீது இரக்கம் காட்டும் சட்ட மாஅதிபர்!
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக் களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 31 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் , சம்பவம் இடம்பெற்ற போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டாம் என சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த மீது இரக்கம் காட்டும் சட்ட மாஅதிபர்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோத கூட்டத்தில் உறுப்பினராக இருத்தல், கொலை முயற்சி, பலத்த காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 327 கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்படவுள்ளது.
2022 மே 09 அன்று அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு வந்த ஆதரவாளர்களுக்கும், காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.
விசாரணைகளில் நேரில் கண்ட சாட்சிகள், சூழ்நிலைச் சான்றுகள் மற்றும் சம்பவ இடத்தில் பதிவான காணொளிகளின் நிபுணத்துவ பகுப்பாய்வுகள் உள்ளிட்டவை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 34 சந்தேகநபர்களில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 31 பேருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
குற்றம் சுமத்தப்படவுள்ளவர்களில் தேசபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மொரட்டுவை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலும், அமல் புஷ்பகுமார டி சில்வா, அஜந்த லியனகே, மஹிந்த கஹந்தகம மற்றும் ‘அரபு வசந்தம்’ என அறியப்படும் அஸங்க நாலக விஜேசிங்க உள்ளிட்டோரும் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டாம் என சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளார். விசாரணை அதிகாரிகள் சமர்ப்பித்த சான்றுகள் அவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக் கருதப்பட்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, இதனை விசாரிக்க மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவை (Trial-at-Bar) நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்ட மாஅதிபர் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.