கொழும்பில் காணி வாங்குவோர் அவதானம்! காத்திருக்கும் ஆபத்து
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அதிக பெறுமதியான காணிகளுக்கு போலி பத்திரங்களை விற்பனை செய்வதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், கொழும்பில் காணிவாங்க நினைப்போர் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம், இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.
சிக்கிய சந்தேகநபர்
அத்துடன், நீதிபதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பல அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 300 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய மோசடியாளர் 72 வயதான மொஹமட் சாலி மொஹமட் அன்சார் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கொழும்பு 10, மாளிகாவத்தை பதும மற்றும் வெல்லம்பிட்டிய கொலன்னாவ வீதியில் வசிப்பவர் என மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 27ஆம் திகதி கொழும்பு எட்மன்டன் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பான விசாரணையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 லட்சம் ரூபாய் மோசடி
குறித்த நபர் வீடு, காணி தருவதாக கூறி நபர் ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து 300 உத்தியோகபூர்வ முத்திரைகள், வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு, 11 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 04 தேசிய அடையாள அட்டைகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர் அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.