தென்னிலங்கையில் இரவு நேர அதிர்ச்சி ; அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் கல்லறையைத் தோண்டிய மர்ம நபர்கள்
கொழும்பு மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இமிடேஷன் நகைகள் திருட முயற்சி
இச்சம்பவம் தொடர்பாக லக்ஷபதிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த தனது தாயாருக்கு 'இமிடேஷன்' ரக மாலை, காதணி மற்றும் வளையல்களை அணிவித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தாயார் உயிரிழந்து ஏழாம் நாள் நினைவாக மயானத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காகச் சென்றபோது, இருவர் சவப்பெட்டியைத் தோண்டிக் கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். இதனைக் கண்டதும் அங்கிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உடல் மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டியிலேயே அடக்கம் செய்யப்பட்டிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தப்பியோடிய இரு சந்தேக நபர்களும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர்களாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நகைகளைத் திருடுவதற்காக இச்செயல் நடத்தப்பட்டதா அல்லது சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சவப்பெட்டியைத் திருடுவதற்காகவா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், தப்பியோடிய ஏனைய இருவரை மொரட்டுவை பொலிஸார் தேடி வருகின்றனர்.