50,000 ரூபா கப்பம் கேட்டு மிரட்டல்; பெண் மருத்துவமனையில்!
தனியாகவிருந்த வயோதிப் பெண்ணைப் பயமுறுத்தி 50,000 ரூபா கப்பம் பெற முயற்சித்த இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சமபவம் அவிசாவளை வெவில கட்டுவாவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கதவைத் திறக்குமாறு மிரட்டல்
நேற்று (20) இரவு 8 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டின் முன் வந்து கதவைத் திறக்குமாறு கூறி வயோதிபப் பெண்ணை மிரட்டியே ஜன்னல் வழியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் சமரசிங்க ஆராச்சிகே பத்மாவதி என்ற 66 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் முகத்தை துணியால் மறைத்து வந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் தனது உறவினரிடம் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்ற அவர்கள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.