கனேடிய தமிழர் பேரவை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்ட அலுவலக கட்டடம்
விசமிகளால் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதில் நாம் உறுதியாக உள்ளோம் எனவும் கனேடிய தமிழர் பேரவை கூறியுள்ளது.
இதேவேளை, அலுவலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் வரை பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்பு கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.