இலங்கை கடற்படையினரின் கொடூர செயல்: தமிழக மீனவர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்
இலங்கை கடற்படை படகு மோதி, கடலில் மூழ்கி மாயமான தமிழக மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களின் படகு மீது மோதி இலங்கை கடற்படையினர் மூழ்கடித்த நிலையில், கடலில் தத்தளித்த 2 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டிருந்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் ஒரு மீனவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
எஸ்.சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரண்(30), சுதாகர் மகன் சுகந்தன்(30), சேவியர்(32) ஆகிய 3 பேரும் காரைநகர், கோவளம் கடற்பரப்பில் எல்லை தாண்டிய நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து படகு மூலம் மீனவர்களின் படகு மீது இடித்ததாக கூறப்படுகிறது. அதில், படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, 3 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.
இவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர். மற்றொரு மீனவரான ராஜ்கிரணை காணாமல் போன நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக கூறி, கடற்படையினரால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மீனவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 1ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.