கிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீதான தாக்குதல்; எதனைக் குறித்து நிற்கிறது?
கிழக்குமாகாண மக்கள் முஸ்லிம் காங்கிரசின் மீதுகொண்ட பற்றின் காரணமாக காலம் காலமாக அக் கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர்.
கட்சியிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகின்றவர்களுக்கு என்ன திறமை இருக்கின்றதா இல்லையா என பார்ப்பதற்கு பதிலாக அவர் மு.காங்கிரசில் வருகின்றாரா அப்படியென்றால் எங்கள் வாக்கு அவருக்கேயென்று கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதன் விளைவுகளைத்தான் நாங்கள் இன்று கண்டுவருகின்றோம்.
மு.காங்கிரஸ் என்ற காரணத்துக்காக வாக்களிக்கின்ற மாபெரிய மடத்தனத்தை கிழக்கு மக்கள் செய்வதனால்தான் கின்னியா குறிஞ்சாகேணி மக்களின் அதிமுக்கிய தேவையான பாலத்தின் மீது யாரும் கவனம் செலுத்தாமல் அலட்சியப் படுத்தி செயல்பட்டதனால் இன்று ஏற்பட்ட கோரவிபத்து.
மக்களுக்கு எதனைச் செய்யாதுவிட்டாலும் மு.காங்கிரஸ் என்ற கட்சியில் தேர்தல் கேட்டால் நாங்கள் ராசா மாதிரி வெற்றியடைவோம் என்ற நினைப்பும், அதற்காக மக்களிடம் மண்டியிடுவதற்கு பதிலாக அக் கட்சியின் தலைவனின் அன்பை பெற்றாலே போதுமானது.
தேர்தல் காலங்களில் கட்சியில் சீட் கிடைத்தாலே போதுமானது என்று நினைக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த தொகுதி மக்களுக்கு பயப்படுவதைவிட அக் கட்சியின் தலைவனுக்கு பயந்து நடப்பதையே காணுகின்றோம்.
அந்த தலைவனும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இவர்களை அடிமைகளாகவே பயன்படுத்துவதையும் நாம் கண்டுதான் வருகின்றோம். அவ்வாறுதான் தலைவர் அஷ்ரப்பின் மரணத்துக்கு பின் தலைமை பதவியை ஏற்றுக்கொண்ட ரஹுப் ஹக்கீம் பல அமைச்சு பதவிகளை தன்வசம் வைத்திருந்தவராவார்.
அந்த பதவியென்பது கிழக்கு மக்களுக்கு சொந்தமானது தலைவர் என்ற பதவியுடன் அமைச்சு பதவிகளையும் தன்னோடு எடுத்துக்கொண்ட ஹக்கீம் , அப் பதவியின் மூலம் கிழக்கு மக்களுக்கு எந்தவித சேவைகளையும் செய்திருக்கவில்லை.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பலம்வாய்ந்த அமைச்சராக இருந்தது மட்டுமல்ல, தன்னுடைய கட்சி பிரதிநிதியாக M.S தௌபீக்கையும் பெற்றிருந்தார். இவர்கள் நினைத்திருந்தால் கின்னியா குறிஞ்சாக்கேணி பாலத்தை எப்பவோ செய்து கொடுத்திருக்க முடியும்.
தற்போது இந்த அரசாங்கத்தில்தான் அந்தப் பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றபோதும் தற்காலிகமாக பாவனையில் விடப்பட்டிருந்த வள்ளங்கள் தரமானதா? பாவனைக்கு உகந்ததா? என்று அவதானிப்பதற்குகூட இந்த அரசியல்வாதிகளினால் முடியவில்லை.
இவ்வாறிருக்கையில் இவர்களையும் இவர்களை ஆதரித்து நிற்கின்ற மக்களையும் என்னவென்று கூறுவது ? இந்தக் கோரவிபத்தின் பின் விழித்துக்கொண்ட மக்கள் மு.காங்கிரசின் எம்பியான M.S தௌபீக்கின் வீட்டை உடைத்து தங்களுடைய ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள நினைப்பது காலம் கடந்த ஞானம் என்றே கூறவேண்டும்.
ஆகவே கிழக்குவாழ் மக்கள் இனிமேலாவது கட்சிக்காக யாருக்கும் வாக்களிப்போம் என்ற கொள்கையை மாற்றி, எங்களின் மீது கரிசனைகொண்ட தரமான ஒருவரை இனம்கண்டு அவருக்கே வாக்களிப்போம் என்ற கொள்கைக்கு மாறவேண்டும்.
இல்லாதுவிட்டால் நாம் பல ஆண்டுகளுக்கு அபிவிருத்தியிலும் இதர உரிமைகளிலும் பின்தள்ளி சென்றுவிடுவோம் என்பதை ஞாபகத்தில் வைத்து செயல்பட வேண்டும். அதேநேரம் நமது மக்களை எமது கிழக்கைசேர்ந்த ஒரு மகனே தலைமைதாங்க வேண்டும் என்ற என்னத்தையும் வலுப்படுத்தி கொள்ளவேண்டும்.
இல்லாதுவிட்டால் எங்கேயோ இருந்து வருபவர்கள் எம்மை மடையனாக்கிவிட்டு செல்வார்கள் என்பதே உண்மை என திருகோணமலையை மட்டுமல்லாது முழுநாட்டையும் உலுக்கிய கிண்ணியா படகு விபத்து தொடர்பில் முகநூல் வாசியான முனை மருதவன் என்பவர் பதிவிட்டுள்ளார்.

