ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்; ஐ.நாவுக்கு அவசர எச்சரிக்கை!
ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், பாரிய கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் சர்வதேச சமூகத்திற்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், புஷெர் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இது அணுசக்தி பாதுகாப்பு விதிகளை மீறும் செயல் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ,
தாக்குதலினால் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் நேரடி அபாயம் உருவாகியுள்ளது.
இது ஈரான் நாட்டை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்வியலுக்கு ஈடுசெய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தும்.
அணுசக்தி நிலையங்கள் மீது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது.
ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தற்போது வரை கதிர்வீச்சு அளவில் மாற்றம் ஏதும் பதிவாகவில்லை எனத் தெரிவித்துள்ள போதிலும், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது