யாழ். நோக்கி ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது தாக்குதல்
யாழிலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்லும் ஆசிரியர்களின் வாகனம் மீது மிலேச்சத்தனமாக கல்வீச்சு தாக்குதல் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் வாடகை அடிப்படையில் வாகனம் ஒன்றினைப் பெற்று அதில் பயணம் செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் பளை பகுதியில் வைத்து குறித்த வாகனத்தின் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் ஆசிரியர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தையும் அதனுடன் தொடர்புடையோரின் வன்முறை செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது அறிக்கையில் குறிப்பிடுகையில் நேற்றைய பொலிசாரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்கள் மீதான இன்றைய தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாகவே பாரிய சந்தேகம் எழுகின்றது.
இவ்விடயம் குறித்து வடமாகாண ஆளுநர் உடனடியாக பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு குறித்த குற்றத்தைப் புரிந்தவர்களும் உடந்தையாக செயற்பட்டவர்களும் உடனடியாக கைது செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் அற்று செயற்படும் அரசாங்கம், ஆகக்குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கேனும் ஆவனம் செய்ய வேண்டும்.