ஞானசார தேரருக்கான நடைபயண பேரணியில் தாக்குதல் ; பொலிஸார் விளக்கத்தால் அம்பலமான விடயம்
சிறையில் உள்ள தேரர் ஒருவருக்காக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த நடைபயண பேரணிக்கு ஆதரவளித்தவர் மீது சில தரப்பினரால் தலைக்கவசத்தினால் தாக்கப்பட்டுள்ளதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரரால் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சிறை வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இடம்பெறும் நடைபயண பேரணிக்கு ஆதரவளித்த ஒருவருக்குத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சட்ட நடவடிக்கை
நேற்று (14) யக்கல, வீதியவத்தையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தனிப்பட்ட தேவைக்காக லொறி ஒன்றில் பயணித்த ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக முரண்பாடு முற்றியதால் ஏற்பட்டதாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்குள்ளான நபர் நடைபயண பேரணிக்கு எந்தவித தொடர்பும் இல்லாதவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்புவது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து அவசியமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் வெளியிட்டுள்ள விளக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் 2026.10.14 அன்று வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், காணொளியில் உள்ள தாக்குதலுக்குள்ளான நபர் வத்துபிட்டிவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறன்றமை குறிபிடதக்கது.