அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு... பாடகி கே.சுஜீவா வழங்கியுள்ள வாக்குமூலம்!
அத்துருகிரியவில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட "கிளப் வசந்த" என்ற சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் கடந்த ஜூலை 8 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில், பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேர் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 10ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் இன்று மீண்டும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய சந்தேக நபரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை அத்துரிகிரிய பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடகி கே.சுஜீவாவிடம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
உயிரிழந்த கிளப் வசந்த மற்றும் பாடகி கே.சுஜீவாவின் கணவர் நயன வாசுல ஆகியோரின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் பொலிசார் இன்னும் கைது செய்யவில்லை என பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி நுவான் ஜயவர்தன தெரிவித்தார்.