ஒலிம்பிக்கிற்குச் சென்ற வீரர்கள் வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இல்லை; நாமல் சாடல்
இலங்கையிலிருந்து ஒலிம்பிக்கிற்குச் சென்ற வீரர்கள் வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இல்லை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய வீராங்கனை ஒருவர் ஓடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பாதணியை வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், எனவே விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஒழுக்க விதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ மேலும் கூறுகையில், இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளில் மூன்று பேர் மட்டுமே தகுதி காண் அடிப்படையில் தெரிவானவர்கள். ஏனையவர்கள் வைல்ட் கார்ட் அடிப்படையில் தெரிவானவர்கள்.
இவர்களில் தகுதிகாண் அடிப்படையில் தெரிவானவர்களுக்கு 30 இலட்சம் ரூபாவும் வைல்ட் கார்ட் அடிப்படையில் தெரிவானவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவும் பயிற்சியாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாவும் வழங்கியதிடன், அவர்களை சினமன் ஹார்டன் ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம்.
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டுவதற்கு உரிய மனநிலையில் வீர, வீராங்கனைகள் இல்லை. தேசிய மட்டத்தில் போட்டிகளில் வெற்றியீட்டுவதே அவர்களின் பிரதான இலக்காக உள்ளது. ஆனால் அதனைத் தாண்டிச் செல்லும் மனநிலை அவர்களுக்கு கிடையாது. இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய வீராங்கனை ஓடுவதற்காக பயன்படுத்தப்படும் பாதணியை வீட்டில் வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
எனவே விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஒழுக்க விதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் அணிந்திருந்த உடை தொடர்பில் சமூக வலையத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்சையான கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளோம்.
சில வீரர்கள் தாம் வழமையாக அணியும் உடையை அணிவதாக ஒலிம்பிக் குழுவிடம் கூறியுள்ளனர். அவ்வாறு இடம்பெற முடியாது. வீர, வீராங்கனைகளில் நடத்தை விதிகளே இதற்குக் காரணம் என தெரிவித்த அவர் இது தொடர்பில் நாம் உரிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதுடன் நடத்தை விதிகளை பாராளுமன்றத்தில் சட்டமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதேவேளை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றிகொள்ள ஒரு நாடு 10 முதல் 15 வருடங்கள் தயாராகின்றது. இம்முறை ஜப்பானும் அவ்வாறான தொரு முறைமையைப் பின்பற்றியே பதக்கங்களை வெற்றி கொண்டு வருகிறது. எமது நாட்டில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேலைத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன.
இந்த நிலைமையை மாற்றியமைக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விளையாட்டுக் கவுன்சில் ஊடாக 2032ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு திட்டமொன்றின் வழியாக இந்த இலக்கை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம். ஒலிம்பிக் போட்டிகளை மையப்படுத்திய நீண்டகால திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் நாம் பதக்கங்களை வெற்றிகொள்வதற்கான போட்டிகளை அடையாளம் காண வேண்டும். துப்பாக்கிச் சூடு, பளு தூக்கல் உட்பட பல்வேறு விளையாட்டுகளை அடையாளம் கண்டுள்ளோம்.
வெளிநாடுகளுக்கு அனுப்பி இவர்களுக்கு பயிற்சியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் 5 பேர் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்று விக்கப்படுகின்றனர்.
அதேபோன்று போட்டியாளர்களும் வெற்றியை இலக்கு வைத்த மன உறுதியுடன் தமது விளையாட்டை முன்னெடுக்க வேண்டும். வீரர்களின் மன வலிமையை பலப்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
விளையாட்டு சங்கங்களை நெறிப்படுத்த விசேட சட்டமூலமொன்றை ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். ஆகவே, குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளுடன் எமது வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றதாகவும் நாமல் எம்பி சபையில் கூறினார்.