அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடை நிறுத்த வேண்டும்! ரணிலிடம் கோரிக்கை
அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நிவாரணத் திட்டத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை குறுகிய காலத்திற்கு குறித்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மற்றும் அரசாங்கத்தின் 62 உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் அஸ்வெசும திட்டத்தின் மூலம் உண்மையிலேயே தகுதியானவர்கள் மானியங்களை இழந்துள்ளதாகவும், தகுதியற்றவர்கள் மானியங்களை பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் இந்த திட்டம் விமர்சிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதியின் பங்களிப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை இதன் காரணமாக சீர்குலைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மானியம் பெற தகுதியுடைய இலட்சக்கணக்கான ஏழை மக்கள் தகுதியின் குறைபாடுகளால் மானியங்களை இழந்துள்ளனர் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கடிதத்தில் பல மாநில அமைச்சர்களும் கையெழுத்திட்டுள்ளனர்