நவராத்திரி 4ம் நாளில் மகாலட்சுமியின் அருளை பெற வழிபாட்டு முறை
நவராத்திரி என்பது முப்பெரும் தேவியர்களை வழிபடுவதற்கான காலமாகும். முப்பெரும் தேவியர்களில் முதலாவதாக துர்கா தேவி, வழிபாட்டினை நிறைவு செய்து, அடுத்ததாக லட்சுமி தேவியை வழிபடதுவங்கும் இன்று நவராத்திரியின் நான்காம் நாளாகும்.
செல்வத்திற்கு அதிபதியான தேவி என்பதால் மகாலட்சுமியை அனைவருக்கும் பிடிக்கும். செல்வம் என்றதும் பலரும் பணம், நகை, சொத்து உள்ளிட்டவற்றை தான் நினைக்கிறார்கள். ஆனால் செல்வங்கள் மொத்தம் எட்டு வகையானது என நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கின்றன.
நிம்மதி, குடும்ப ஒற்றுமை, குழந்தை, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, வெற்றி, குறைவில்லாத உணவு, பணம், நிறைவான வாழ்க்கை ஆகிய எட்டு வகையான விஷயங்களை தான் அஷ்ட செல்வங்கள் என்கிறோம்.
இதை அருளும் லட்சுமி தேவியின் எட்டு வடிவங்களை தான் அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். அதனால் லட்சுமி தேவியிடம் வேண்டிக் கொள்ளும் போது நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையும், அதற்கு தேவையான பணத்தையும் அருள வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நவராத்திரியின் நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் திருநாமத்தாலேயே வழிபட வேண்டும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய மலர், பழம் கிடைக்கவில்லை என்றாலும், அந்த நாளுக்குரிய பிரசாதம் செய்து, படைத்து வழிபட முடியவில்லை என்றாலும் வருத்தப்பட தேவையில்லை.
அவரவர்களால் என்ன முடிகிறதோ அந்த பொருட்களை வைத்து எளிமையாக அம்பிகையை வழிபட்டால் அதை ஏற்றுக் கொண்டு, அருள் செய்வாள்.
நம்முடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதற்கு என்ன தேவையோ அதை அருள வேண்டும் மகாலட்சுமியிடம் வேண்டிக் கொள்ளும் நாள் இது. இந்த நாளில் என்ன பிரசாதம், மலர்கள் படைத்து, மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 4ம் நாள் வழிபாடு
அம்பிகையின் பெயர் - மகாலட்சுமி
கோலம் - படிக்கட்டு வகை கோலம்
மலர் - ஜாதிமல்லி
இலை - கதிர்பச்சை
நைவேத்தியம் - கதம்ப சாதம்
சுண்டல் - பட்டாணி சுண்டல்
பழம் - கொய்யா பழம்