கோடை காலத்தில் ஆஸ்துமா பிரச்சனையை சமாளிக்க உதவும் வழிகள்
கோடை காலத்தில் எதனால் ஆஸ்துமா வருகிறது? கோடை காலத்தில் நிலவும் சூடான காற்றில் உள்ள வறட்சி தொண்டையை வறண்டு போக வைப்பதோடு நீரிழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் மூச்சுத்திணறல், வெப்பம் நிறைந்த காற்றில் சுவாசிப்பது வீக்கத்தை அதிகப்படுத்தி கூடுதல் பிரச்சனையை உருவாக்கும்.
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது வெப்பத்தை அதிகரிப்பத்தோடு மட்டுமல்லாமல் ஆஸ்துமாவையும் வரவழைக்கிறது. இதுபோன்ற சமயங்களில் பருவகால அலர்ஜிகள் சுவாசப் பிரச்சனைகளை தூண்டிவிடுகின்றன. ஆகையால் கோடை காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இதுதவிர காற்று மாசுபாடு, ஈரப்பதம், அதிகப்படியான வெப்பநிலை சுவாசக் கோளாறை மேலும் அதிகமாக்குவதற்கு காரணமாக இருக்கிறது. இதை கையாள 4 எளிமையான வழிகள் இருக்கிறது அது பற்றி நாம் இங்கு பார்போம்.
நீர்ச்சத்து
கோடை காலமோ அல்லது குளிர்காலமோ, எந்த பருவமாக இருந்தாலும் உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோடை காலத்தில் நாம் அதிகப்படியான நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் வெப்ப தாக்கத்தை குறைக்க முடியும். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் பருகுவதால் காற்றுவழிப் பாதைகளில் ஈரப்பதம் தக்கவைக்கப்படுகிறது. இது ஆஸ்துமாவின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
மாஸ்க் பயன்படுத்துதல்
நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது அல்லது பொது இடங்களுக்குச் செல்கையில் மாஸ்க் பயன்படுத்த தவறாதீர்கள். இது மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகளில் தூசிகள் செல்வதை தடுக்க உதவுவதோடு நோய் தொற்று தாக்குவதையும் தடுக்க உதவுகிறது.
வைட்டமின் சி
உங்கள் டயட்டில் வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி தொற்று ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. இதுதவிர அழற்சி எதிர்ப்பு உணவுகளை சேர்த்துக்கொள்வதாலும் உடலில் வீக்கம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும்.
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி
உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தினமும் இவ்வாறு 10-15 நிமிடங்கள் செய்வதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி மூச்சுத்திணறல், இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.