வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு - 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று
வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான வரலாற்று சர்ச்சைகளுக்கு இடையே, 1990ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.
1990 ஏப்ரல் 16 (சித்திரை 03) அன்று எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் அந்தப் புகைப்படத்தில், ஒரு குடும்பம் மலையின் உச்சிப்பகுதிக்கு சென்று வழிபாடு நடத்தும் காட்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புகைப்படத்தில் காணப்படும் ஒருவராக அடையாளம் காணப்பட்ட 80 வயதுடைய நபர், 1990களில் நெடுங்கேணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒலுமடு உள்ளிட்ட கிராமங்களில் வசித்த மக்கள் வண்டிகளில் பயணம் செய்து இந்த மலைப்பகுதிக்கு வந்து சிவபெருமானை வழிபடுவது வழக்கமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்மைக்காலங்களில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் சில தரப்புகள், வெடுக்குநாறி மலைப்பகுதியில் இந்து வழிபாடுகள் 2012ஆம் ஆண்டிற்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறி வருகின்றன.
ஆனால், தற்போது பரவி வரும் இந்தப் புகைப்படம், அப்பகுதியில் பல தசாப்தங்களுக்கு முன்பே வழிபாட்டு நடைமுறைகள் இருந்திருக்கலாம் என்ற கருத்துகளை வலுப்படுத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
மேலும், மலைப்பகுதியைச் சுற்றி காணப்படும் காடுகள் மற்றும் ‘வெடுக்குநாறி’ மரங்களின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாகவும், அப்பகுதியில் காணப்படும் பிராமி கல்வெட்டுகள் மற்றும் குகைகள் இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
குறிப்பாக, 2018ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வழிபாடு மற்றும் நிலைமை தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.
2024ஆம் ஆண்டின் மகா சிவராத்திரி வழிபாட்டின்போதும், பக்தர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்புகளின் நிலைப்பாடுகள் மாறுபட்டவையாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.