விடுதலையாகிறார் ஆர்யன் கான்! மகிழ்ச்சியில் ஷாருக்கான்
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 'பாலிவுட்' நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 20 நாட்களாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். 3வது நாளாக இன்றும் விசாரணை இடம்பெற்றுள்ளது.
ஆர்யன்கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை. ஏற்கனவே 2 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கு சரியான காரணம் கூறப்படவில்லை என முகுல் ரோஹத்கி வாதாடினார். இதேவேளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றம், ஆர்யன்கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தமேசா ஆகியோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நவம்பர் 2 ஷாருக்கான் பிறந்தநாளுக்கு முன்பாக ஆர்யன் கான் விடுதலையாவர் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.