முகநூல் பதிவிற்காக கைதானவர் 10 மில்லியன் கோருகின்றார்!
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை விமர்சித்தமைக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், 10 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
பிலியந்தலை, மடபாத பகுதியைச் சேர்ந்த கணினி மென்பொருள் தயாரிப்பாளர் சிரந்த ரன்மல் அமரசிங்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட ஏழு பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவரது மனுவில் கூறியுள்ளபடி, மனுதாரர் ஒரு தொழில்முறை மென்பொருள் தயாரிப்பாளர் என்பதுடன் அவர் சிலோன் மோட்டார் சைக்கிள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். மனுதாரர் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து முகநூலில் பல்வேறு குறிப்புகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மனுதாரரின் வீட்டிற்கு சிஐடி அதிகாரிகள் குழு சென்று அவரது பேஸ்புக் பதிவுகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதோடு மனுதாரரின் முகநூலில் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கணினி உபகரணங்களுடன் மறுநாள் திணைக்களத்திற்குத் திரும்புமாறு மனுதாரரை அறிவுறுத்தியுள்ளனர். மறுநாள் அவர் சிஐடிக்கு சென்றபோது, தகனம் செய்வது தொடர்பான கோவிட் முக புத்தகத்தில் உள்ள குறிப்பை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
மனுதாரர், ஒரு பக்தியுள்ள கத்தோலிக்கராக, கோவிட் தொற்றால் இறந்தவர்களின் தகனத்தை கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர் மனுதாரர் கோவிட் விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மனுதாரர் நவம்பர் 18, 2020 அன்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி மனுதாரரின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு கொலை மிரட்டல் வந்த நிலையில், அது தொடர்பில் அவர், பொலிஸ்மா அதிபரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், கணினி உபகரணங்களை மீள ஒப்படைக்குமாறு சிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்பதுடன் 10 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியும் அவரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.