ஆலயத்தில் இருந்த நடராஜர் விக்கிரகத்தை களவெடுத்த இராணுவம்
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடிய சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே கைதாகியுள்ளார். மாதாந்த விடுமுறையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
50,000 ரூபாய் பெறுமதியான நடராஜர் சிலை
சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி விற்பனைக்காக பையில் வைத்துக்கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட 50,000 ரூபாய் பெறுமதியான நடராஜர் சிலையும் சந்தேகநபரும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.