வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவார்களா?
வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவதாக மலேசிய அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் (Zulkifli Hasan), சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில், இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக அல்லது LGBTQ சமூகத்தை நோக்கி ஈர்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
பணியிடங்களில் ஏற்படும் அதீத மன உளைச்சல், நண்பர்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் அதாவது குடும்ப அமைப்பில் இருந்து விலகி இருப்பது போன்ற காரணங்கள் இளைஞர்களை ஓரினச் சேர்க்கைக்கு ஈடுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அவரின் இந்த கருத்து மலேசியாவிலும் சர்வதேச அளவிலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இதனை தவறான தகவல் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

பாலியல் நோக்குநிலை என்பது ஒருவரின் பிறப்பு மற்றும் உயிரியல் சார்ந்தது, அது வேலை அழுத்தத்தால் மாறும் ஒன்றல்ல என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இளைஞர்கள் சந்திக்கும் உண்மையான பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமைச்சர் இவ்வாறான கருத்துக்களைக் கூறி திசை திருப்புவதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மலேசியாவில் LGBTQ சமூகத்திற்கு எதிரான சட்டங்கள் ஏற்கனவே கடுமையாக உள்ள நிலையில், அமைச்சரின் இத்தகைய பேச்சு அந்தச் சமூகத்தினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டலாம் என அஞ்சப்படுகிறது.
மலேசிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் இன்னும் அதிகாரபூர்வமான திருத்தங்களை வழங்கவில்லை. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் அமைச்சரின் பேச்சுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
மலேசியாவின் பல மனித உரிமை அமைப்புகள், அறிவியல் பூர்வமான உண்மைகளை மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் பேச வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.