தினமும் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
எளிமையான மற்றும் எல்லோருக்குமான உடற்பயிற்சியாக இருப்பது நடைப்பயிற்சிதான். பலரும் எடை குறைப்புக்காக பயன்படுத்தும் நடைப்பயிற்சி, ஒட்டுமொத்தமாக உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும். அதில் முக்கியமான நன்மைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இதய நலன்
நடைப்பயிற்சியானது சிறந்த ஏரோபிக் பயிற்சி என்பதால் இதயத்துக்கு அதிக நன்மைகளை கொடுக்கும். வேகமான நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதயப் பிரச்சனைகளை தடுக்கவும் உதவும். மேலும் இதயத்தின் தசைகளை வலுப்படுத்துவதுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீர்படுத்தவும் நடைப்பயிற்சி உதவும்.

எலும்புகளை வலுப்படுத்தும்
வேகமான நடைப்பயிற்சி தசை வளர்ச்சியை ஊக்குவித்து எலும்புகளை வலுப்படுத்தும். நடைப்பயிற்சியின்போது உடலின் எடையை கால்கள் தாங்கும் என்பதால் கால்கள், வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் உள்ள தசைகளைத் தூண்டப்பட்டு, ஒட்டுமொத்தமாக தசை இறுக்கம் கிடைக்கும். முதியோரை பாதிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் நடைப்பயிற்சி உதவும்.

மன அழுத்தம் குறையும்
உடல் இயக்கம் அதிகமாகும் போது உடலில் எண்டார்ஃபின்ஸ் என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கும். இது மனநலன் மேம்படவும், பதற்றம் மற்றும் மன அழுத்தம் நீங்கவும் உதவும். ட்ரெட்மில்லில் நடப்பதைவிடவும் பார்க், கடற்கரை போன்ற இடங்களில் நடப்பதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். ஏனெனில் இது இயற்கை வெளிச்சத்தை உடலுக்கு கொடுத்து தூக்கத்தை நெறிபடுத்தவும், வைட்டமின் டி உடலுக்கு கிடைப்பதை உறுதிசெய்யவும் உதவும்.

எடை குறையும்
இத்துடன் உடலில் கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் நடைப்பயிற்சி உதவும். இதனால் எடை இழப்பு சாத்தியப்படும். இருப்பினும் நடைப்பயிற்சியை மட்டும் சார்ந்திருக்காமல் வலிமைக்கான பயிற்சிகளையும் சேர்த்து செய்ய வேண்டும். ஏனெனில் அப்போதுதான் தசை இழப்பை தடுக்கவும், தசை வலிமையை உறுதிப்படுத்தவும் முடியும்.

ஆற்றல் அதிகரிக்கும்
அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் மேம்பட்டு உடலில் வலிகள் தடுக்கப்பட்டு, காயத்திலிருந்து மீளும் வேகம் அதிகரிக்கும். இவையாவும் ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும்.
