ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என பேராயர் கர்தினால் நம்பிக்கை
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞையை எதிர்வரும் 5 வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துள்ளதாகக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எக்னலிகொட, கீத் நொயார், லசந்த விக்ரதுங்க போன்ற ஊடகவியலாளர்களுக்கு நடந்த அசம்பாவிதங்களுக்குப் பின்னணியில் அரசியல்வாதிகளே இருந்தனர்.
அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திலும் இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முறைமை மாற்றத்தை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்துக்கு நாம் அதிகாரத்தை வழங்கியுள்ளோம். கடுவாப்பிட்டிய தேவாலயத்தில் வழங்கிய உறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.
இந்த விடயத்தில் சாட்சியங்களை மறைக்காமல் முறையாக விசாரணைகளை மேற்கொண்டு, நீதியை வழங்க வேண்டும்.
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னதாக நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞை கிடைக்குமாயின் அது குறித்து மகிழ்ச்சியடைய முடியும்.
இல்லையெனில், மீண்டும் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.