யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழக கட்டுமான வேலைகளுக்கு அனுமதி
யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (11) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம்
அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைக்கமையவும் மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் பல கருத்திட்டங்கள் மூலம் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டிடங்கள் மற்றும் வசதிகள் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆயினும், யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் சில குறிப்பிட்ட காலப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு இயலுமை கிட்டவில்லை.
அதற்கமைய, கட்டுமானங்களைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்கான முன்மொழியப்பட்டவாறான மொத்த செலவு மதிப்பீட்டை திருத்தம் செய்வதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.