கோட்டாவை விட மோசமான நிலை அனுரவுக்கு ஏற்படும்; ஹரீன் பெர்னாண்டோ சவால்!
கோட்டாவை விட மோசமான நிலை ஜனாதிபதி அனுரவுக்கு ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அனுர குமார அழகிய கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது ஹரீன் பெர்னாண்டோ மேலும் குறுகையில்,

ஜனாதிபதி தப்பியோட வேண்டிய நிலை ஏற்படும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துவிட்டுச் சென்றார். ஆனால், தற்போதைய ஜனாதிபதிக்குத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவாறு தப்பியோட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
'கஜு கான சீயா' (ரணில் விக்ரமசிங்க) நாட்டுக்காகச் சேமித்து விட்டுச் சென்ற 6 பில்லியன் டொலர் கையிருப்பு மாத்திரமே இன்று எஞ்சியுள்ளது." "இந்த அரசாங்கம் திருடவில்லை என்று கூறப்படுகிறது.
இவர்கள் எந்த வேலையையும் செய்யாததால்தான் திருடவில்லை. ஏதாவதொரு வேலையைச் செய்யத் தொடங்கினால், முதல் முயற்சியிலேயே தோற்று விடுகிறார்கள். பொருளாதார வீழ்ச்சிக்குத் தான் பொறுப்பல்ல எனவும், உலகப் போரே காரணம் எனவும் ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார்.
எதனையும் கண்மூடித்தனமாக நம்பும், சிந்திக்கும் திறனற்ற மக்கள் இருக்கும் ஒரு நாடு ஒருபோதும் முன்னேறப் போவதில்லை." "அரசாங்கம் எதனைக் கையிலெடுத்தாலும் அதில் தோல்வியே மிஞ்சுகிறது. எரிவாயு மற்றும் 'QR' முறைமையிலும் அதுதான் நடந்துள்ளது.
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது என்றால், ஏன் இன்னும் வரிசைகள் காணப்படுகின்றன? கப்பல்கள் வரிசையாக வரும் என்று கூறியவர்கள், இப்போது ஏதோ ஒரு நாளில் ஒரு கப்பல் வரும் என்ற கதைகளைக் கூறுகிறார்கள்.
வாக்குறுதிகள் அனைத்தும் இன்று வேடிக்கையாக மாறியுள்ளன எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்திடம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இல்லை எனவும் ஹரீன் பெர்னாண்டோ அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.