ஜனாதிபதி அநுர ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து பேசாமல் வரி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரித்தார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பருவகால கூட்டத்துக்கு செல்லும் போது அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினரை சந்திக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். அவ்வாறான பேச்சுவார்த்தைகள் ஊடாக எதையும் செய்ய முடியாது.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ட்ரம்ப்பின் வரி கொள்கை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே நான் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றேன்.
ஆனால் அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு 90 நாட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனை விடுத்து வரி நீக்கம் செய்யப்படவில்லை.
எமக்கு முன்னர் வேறு நாடுகள் சென்று அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைத்துக் கொண்டால் எமக்கு நெருக்கடி ஏற்படும். எனவே எமக்கு நேரம் போதாது. விரைவில் இதற்கு பொறுத்தமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
வரி விதிக்கப்பட முன்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றார். அதற்கமைய அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இவ்வாரம் மோடியை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த 90 நாட்களுக்குள் ஏதேனும் செய்வதற்கு இந்தியா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தோனேஷியாவும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.
இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பருவகால கூட்டத்துக்கு செல்லும் போது அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினரை சந்திக்கவுள்ளதாகக் கூறுகின்றனர்.
அவ்வாறான பேச்சுவார்த்தைகள் ஊடாக எதையும் செய்ய முடியாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாக சென்று ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து எனக்கு தெரியாது என்னால் முடியாது எனக் கூறிக் கொண்டு ஒழிந்து கொண்டிருப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை.
இம்மாத இறுதியில் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இலங்கை வரவுள்ளனர். ஆனால் அடுத்த வருடம் இலங்கை மாத்திரமின்றி ஏனைய நாடுகளும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்க நேரிடும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பெற்றுக் கொள்ள நாம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்திடம் எந்த திட்டமிடலும் இல்லை. ஜனாதிபதிக்கு இது தொடர்பில் நான் ஆலோசனை வழங்கினேன்.
ஆனால் அவர் அதனைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பொருளாதார பிரச்சினையை இந்த அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதனைப் புரிந்து கொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றார்.