மக்களை ஏமாற்றும் அநுர அரசு ; எதிர்க்கட்சித் தலைவர் சாடல்
அநுர தலைமையிலான திசைகாட்டி அரசு வாக்குறுதிகளை மீறித் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது. தற்போது இந்த அரசுக்கு ஏமாற்றே மிஞ்சிப்போயுள்ளது." என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசு நாட்டு மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்து வருகின்றது.
நேற்று திடீரென எரிபொருள்களில் விலை அதிகரிப்பைச் செய்தது. எரிபொருள் விலையை அதிகரித்த தற்போதைய அரசு, கடந்த தேர்தல் காலங்களில் ஏலவே காணப்படும் எரிபொருள் விலைச்சூத்திரத்தை மாற்றுவோம் எனக் கூறியது.
போதாக்குறைக்கு துறைமுகத்தில் இறக்கப்படும் எரிபொருளை அதே விலையில் நுகர்வோருக்கு பெற்றுத் தருவோம் என உரக்கத் தெரிவித்தது. துறைமுகத்தில் ஒரு விலைக்கு இறக்கப்படுகின்றது.
பின்னர் பொதுமக்களுக்கு மற்றொரு விலையில் விற்கப்படுகின்றது. ஊழல், மோசடி, திருட்டு மற்றும் இலஞ்சம் போன்றனவையே இதற்குக் காரணம்.
இவை அனைத்தையும் நிறுத்துவோம், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவோம். துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் எனத் தற்போதைய ஆளும் தரப்பினர் வாக்குறுதியளித்திருந்தனர்.
ஆனால், தெளிவான அதிகாரத்தோடு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆளும் தரப்பினரால் இன்றளவில் இதில் எதுவும் நடக்கவில்லை.
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் கொமிஸ் எடுத்தல் நிறுத்தப்பட்டுள்ளனவா? எரிபொருள்கள் மீதான வரிச்சுமைகள் நீக்கப்பட்டுள்ளனவா? என்பன குறித்து நாம் இந்த அரசிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் நுகர்வோருக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் நாம் இந்த அரசிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.