வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகள் ; அநுர அரசின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை
இலங்கையில் கொலை, கப்பம் கோருதல், போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் பாரிய தாக்குதல் குற்றங்களுடன் தொடர்புடைய 95 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளதாக சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இந்த 95 சந்தேக நபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் சிவப்பு அறிவித்தல் மூலம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
2025 ஆம் ஆண்டில் சர்வதேச பொலிஸார் மற்றும் அந்தந்த நாட்டு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாரிய குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற நிலையில், அங்கிருந்தபடியே தமது உதவியாளர்கள் மூலம் கொலை, கப்பம் கோருதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை முன்னெடுத்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்கள் அனைவரும் இந்தப் பட்டியலில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச பொலிஸ் வலைப்பின்னல் ஊடாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.