வைத்தியர்களின் கவனக்குறைவினால் பதிவான மற்றுமொரு மரணம்
மரியராஜ் சிந்துஜா என்ற பெண் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணைக்குழு தமது விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பான தங்களது அறிக்கையைக் குறித்த சுயாதீன விசாரணைக்குழு, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதுடன் அது மேலதிக நடவடிக்கைகளுக்காகச் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற குறித்த பட்டதாரி பெண், குருதி போக்கு காரணமாகக் கடந்த 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ள சுயாதீனக் குழுவின் விசாரணைகளுக்கு அமைய, அங்குக் கடமையிலிருந்த சிலர் தவறிழைத்தமை உறுதியாகியுள்ளது.
அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று நாளை மறுதினம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த பெண் உயிரிழந்தமைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.