தோற்கடிக்கப்பட்ட மற்றொரு வரவு செலவுத் திட்டம்! ஆளும்தரப்புக்கு அதிர்ச்சி
ஆளும்கட்சியின் வசமுள்ள வாரியபொல பிரதேச சபை தவிசாளரால் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தவிசாளர் டி.எம்.டி. பி. திஸாநாயக்க (D.P. Dissanayake) பொதுச் சபையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
இதன்போது, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட பிரேரணையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபையின் உப தவிசாளர் அனுரா சுதர்சன (Anura Sudarshana) மற்றும் அக்கட்சியின் பல உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட யோசனைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தன. இதன்படி வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, வாரியபொல பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 23 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களும், ஜனதா விமுக்தி பெரமுனவின் 02 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் 01 உறுப்பிரும் உள்ளனர்.
அண்மையில் ஆளும் பொதுஜன பெரமுன வசமுள்ள கதிர்காமம் பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.